தொல்காப்பியத்தில் உணர்வுக் கோட்பாடு

சங்க இலக்கியம் தமிழர்களின் அகப்புற வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. தொல்காப்பியம் வாழ்வியலுடன் இலக்கணத்தை எடுத்துக்கூறுகிறது. புலவர்கள் தாங்கள் வாழும் காலத்து நிகழ்வுகளைப் புனைவுளுடன் பாடல்களாகப் படைக்கின்றனர். இப்புனைவுகளுள் அவர்களது உணர்வுகள் மாந்தர்களின் வழியாக நம்மை அடைகின்றன. தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்றிற்குள் ஐவகை இலக்கணத்தையும் வகுத்துக் கூறியுள்ளார். தொல்காப்பியக் கருத்துகளை அடியொற்றியே தமிழிலக்கிய, இலக்கண ஆய்வுலகில் பெரும்பான்மையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் உணர்வு தொடர்பான கருத்தாக்கங்கள் தொல்காப்பியத்தில் பதிவிடப்பட்டுள்ள விதத்தை ஆய்வது உணர்வுசார் ஆய்வுகளுக்கு அடிப்படையானதாக அமைகிறது.