மருதநாயகம் வாழ்க்கை வரலாறு
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா அன்னியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது, பல தலைவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்து நாட்டின் விடுதலைக்காக போராடினர். இருப்பினும், அவர்கள் உடன் இருந்தவர்களின் துரோகத்தால் வீழ்ந்தனர்.
அத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்களுள், பிரித்தானியருக்கு எதிராக வீரப்போர் புரிந்த யூசுப் கான் எனும் மருதநாயகம் குறிப்பிடத்தக்கவர்.
- பிறந்த ஆண்டு: கி.பி 1725
- பிறந்த இடம்: இராமநாதபுரம், பனையூர்
- இயற்பெயர்: மருதநாயகம்
- மறுபெயர்: முஹம்மது யூசுப்கான்
- பட்டம்: கான் சாஹிப்
- இறப்பு: 1764 அக்டோபர் 15
ஆரம்ப வாழ்க்கை
மருதநாயகம் அவர்களின் குடும்பம், ஆரம்பத்தில் இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்ததாக இருந்தது. பின்னர் அவர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவினர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த மருதநாயகத்தை, அவரது ஊரைச் சேர்ந்த இராணுவ மருத்துவர் முகம்மது கமல் என்பவர் வளர்த்தார். அவரே மருதநாயகம் என்பதை, முஹம்மது யூசுப்கான் என பெயர் மாற்றம் செய்தார்.
மருதநாயகம், சிறுவயதிலிருந்தே யோகா மற்றும் வர்மக்கலை போன்ற துறைகளில் ஆழ்ந்த பயிற்சி பெற்றார். முறையான கல்வியில் ஆர்வம் இல்லாததால், தனது சொந்த ஊரான பனையூரில் இருந்து வெளியேறினார்.
மருதநாயகம், தஞ்சாவூரில் இராணுவ சிப்பாயாகப் பணியாற்றினார். அப்போது, பிரித்தானிய கட்டளைத் தளபதியான கெப்டன் பிரண்டனின் நட்பு அவருக்குக் கிடைத்தது. கெப்டன் பிரண்டனிடமிருந்து பிரெஞ்சு, போர்த்துகீஷ், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளைத் தனது ஆர்வத்தால் கற்றுக்கொண்டார். மொழித்திறனை வளர்த்துக்கொண்ட பின், தஞ்சாவூரிலிருந்து ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு மாற்றப்பட்டார்.
1692-ஆம் ஆண்டில், முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப், கர்நாடகா உள்ளிட்ட பல தென்னிந்தியப் பகுதிகளில் வரி வசூலிப்பதற்காக நவாப்புகளை நியமித்தார். ஆரம்பத்தில் நவாப் சுல்பிக்கார் அலி என்பவரை வரி வசூலிக்க நியமித்தார் அவுரங்கசீப். இவர் மராட்டிய மற்றும் விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தவர். ஆற்காடு நவாபுகளின் தலைநகரம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு நகரமாகும்.
ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப், தன் மகன் ராஸா சாஹிப் தலைமையில் 10,000 வீரர்களை அனுப்பினார். நெல்லூரின் தலைமை வரி வசூலிப்பாளராக இருந்த மருதநாயகம், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இருப்பினும், பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் செயல்பட்ட சந்தா சாஹிப்பின் படை தோல்வியடைந்தது. 1749-ஆம் ஆண்டு முகமது அலி வாலாஜாவை பிரித்தானியர்கள் நவாப்பாக நியமித்தனர். இதற்காக, மதுரையிலும் நெல்லூரிலும் வரி வசூலிக்கும் உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினர்.
நவாப் முகமது அலி வாலாஜாவின் படையில் மருதநாயகத்தின் திறமையை வியந்த ராபர்ட் கிளைவ், அவரைத் தன் படையில் இணைத்தார். மேலும், மேஜர் ஸ்ட்ரிங் லோரன்ஸ், மருதநாயகத்திற்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார்.
மருதநாயகம் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். இந்துக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் சென்னையில் இருந்தன. அவற்றை மகாதேவன்கள் என்ற கொள்ளைக்கூட்டத்தினர் சூறையாடினர். மருதநாயகம் கடும்போராடி அந்தச் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார். அந்தப் பொருட்கள் பல, இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளன.
மருதநாயகம் ஒரு சிறந்த சமூகப் பணியாளராகவும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை பேணிய தலைவராகவும் விளங்கினார். அவர் இந்துவாகப் பிறந்து பின்னர் இஸ்லாத்தை தழுவியபோதும், இந்துக்களின் உரிமைகளைப் பாதுகாத்தார். மதுரை நகர ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன், அழகர்கோயில் ஆங்கிலேயர் வசம் இருந்தது. மருதநாயகம் ஆளுநரானதும், அழகர் கோயிலை இந்துக்களிடம் திருப்பிக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாகப் பணிபுரிந்த மருதநாயகம், பின்னர் கப்பம் கட்ட மறுத்த குறுநில மன்னர்களை ஒடுக்கினார். கட்டாலங்குளத்து மன்னரான அழகுமுத்துக்கோன் கப்பம் கட்ட மறுத்ததால், அவரைச் சூழ்ச்சியாகப் பிடித்து சிறையில் அடைத்தார். அழகுமுத்துக்கோன் சிறையில் பல இன்னல்களை அனுபவித்தபோதும் கப்பம் கட்ட ஒப்புக் கொள்ளவில்லை. அவரது தாய்நாட்டுப் பற்றும் வீரமும் மருதநாயகத்தை ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிடத் தூண்டியது.
ஆங்கிலேயர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்த மருதநாயகம், அவர்களை பல இடங்களில் தோற்கடித்தார். பின்னர், ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு பெரிய படையைத் திரட்டிப் போரிட்டார்.
1764 அக்டோபர் 13-ம் தேதி தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மருதநாயகம் அவருடைய குடும்பத்தினராலேயே கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் 1764 அக்டோபர் 15-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். மூன்று முறை தூக்கிலிடப்பட்ட பிறகும் அவர் உயிர் பிழைத்ததால், வர்மக்கலை நிபுணர்கள் உதவியுடன் நரம்புகளை செயலிழக்கச் செய்து கொல்லப்பட்டார்.