மனிதனின் கண்டுபிடிப்புகளில் கணினியின் பயன்பாடு இன்று அபாரமான வளர்ச்சியை எட்டியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் கணினியின் பயன்பாடு பெருகிவிட்டது. மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வித்துறையில் கணினியின் பயன்பாடு இன்றியமையாததாகிவிட்டது. தமிழ்மொழி கற்பித்தல் ஏட்டுக்கல்வியாக இருந்து இன்று கணினிவழிக் கல்வியாக மாறியிருக்கிறது. கணினியினால் தமிழ்மொழி கற்பித்தல் அடுத்தகட்ட வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி கற்பித்தலுக்கு (Teaching) மட்டுமின்றி, கற்றலுக்கும் (Learning) பெரும் உதவியாக இருந்துவருகிறது.
கற்பித்தலில் கணினியின் பயன்பாடு ஆரம்பக்கல்வி முதல் முனைவர்பட்ட ஆய்வு வரை அடிப்படைத் தேவையாக இருக்கிறது. கணினியினைக்கொண்டு கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்களை நீக்கமுடியும். எளியமுறையில் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கு நடைமுறையிலுள்ள சொற்களைக்கொண்டும் பொருள்களைக்கொண்டும் கற்பிக்கலாம். கற்றலுக்கும் கணினியின் உதவியினால் இணையத்தைப் பயன்படுத்தி உலகையே கைக்குள் கொண்டுவரமுடியும். உலக நாடுகள் கற்பித்தலைக் கணினியினைக்கொண்டு அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டுசெல்கின்றன. தமிழ்மொழி
கற்பித்தலுக்குக் கணினி எந்தெந்த வகைகளில் தேவைப்படுகிறது என்பதனை
ஆராய்ந்து எடுத்துக்கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறிச்சொற்கள்
தமிழ்க்கணினி, இணையம், கற்பித்தல், மென்பொருள், வலை தளங்கள்
முன்னுரை
கற்றலும் கற்பித்தலும் நம்முடன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துவருகிறது. அது காலத்திற்கேற்பவும் சூழலுக்கு ஏற்பவும் மாறிவருகிறது. கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கும் இன்று நம்மிடம் உள்ள கணினிக்கும் நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகிறது. இந்த மாற்றங்கள்தான் கணினியின் வளர்ச்சியாக நாம் கருதுகிறோம். இன்றைய கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் கணினி இன்றியமையாத ஒரு கருவியாகவே மாறிவிட்டது. மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வித்துறையில் பல நிலைகளில் கணினி பயன்படுகிறது.
கணினியில் தமிழ்மொழியின் பயன்பாடு பெருகியுள்ளது. தமிழ்மொழியினைக் கற்கவும் கற்பிக்கவும் கணினியினை ஒரு துணைக்கருவியாகப் பயன்படுத்தி வருகிறோம். இலக்கணத்தை நன்கு சிக்கலின்றிக் கற்பிக்க, கற்கக் கணினி எளிதாக வழிவகுக்கிறது. இன்று தமிழ்மொழி வளர்ச்சிக்குக் கணினி பெரும் பங்களிப்பை வழங்கிவருகிறது. கற்பித்தலுக்குக் கணினியை ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதனை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
தமிழ்க்கணினி
கணினியைப் பயன்படுத்திக் கற்றல், கற்பித்தல் எவ்வாறு எளிமையாகிறது என்பதும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எவ்வாறு வழிசெய்கிறது என்பதும் பின்வரும் நிலைகளில் அறியலாம். கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் கணினி இன்று இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. தமிழ்க்கணினி இன்று அனைத்து பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தமிழ்க்கணினி பயன்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் கணினியைப் பயன்படுத்தி தமிழ் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்வழியிலேயே கணினியின் பயன்பாட்டை கற்றுத்தருகின்றன. முடக்கலை (Offline) இயங்கு நிலை (Online) என்ற இரண்டின் மூலமும் கணினிவழித் தமிழ்மொழிக் கற்பிக்கலாம்.
தமிழ் இணைய கல்விக்கழகம் கணினிவழி இன்று பல்வேறு தமிழ்ப் பட்டங்களையும் பட்டையங்களையும் வழங்கிவருகிறது. இதன்மூலம் பட்டங்களைப் பெற்ற மாணவர்கள் கணினிவழி கற்பித்தலுக்கான எளிய முறைகளை புதிய மென்பொருள்களைக் (New Software) கொண்டு உருவாக்குகின்றனர். கணினி மூலம் தமிழ்க் கற்றுக்கொள்வதற்கு இணையம் இன்றியமையாததாக இருக்கிறது.
“அன்றாட வாழ்வில் இணையத்தைப் பயன்படுத்தினாலும் அதில் எந்தெந்த இடங்களில் தமிழைப் பயன்படுத்த முடியும் என்பதையும் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.” [1]
இணையத்தின் தொடர்பு இல்லாமல் தமிழைத் தட்டச்சு செய்வதற்கு மென்பொருள் (Software) கணினியில் நிறுவுவதால் இணையமின்றி தமிழைத் தட்டச்சு செய்யலாம். இன்று அனைத்து சான்றிதழ்களையும் கணினிவழியே எளிதாகப் பெறமுடிகிறது. அதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழில் தட்டச்சு செய்வதன் மூலம் நமக்குத் தேவையான சான்றிதழ்களையும் பிற செய்திகளையும் தமிழில் நாமே தேடி பெற்றுக்கொள்ளலாம்.
இன்றைய கற்பித்தலுக்குக் கணினியின் தேவை
தமிழ்மொழிக் கற்பித்தலுக்குப் புதிய கணினி மென்பொருள்கள் தேவையாக உள்ளது. ‘தேவையே கண்டுபிடிப்பின் தாய்’ (Necessity is the mother of invention) என்ற பழமொழியே இன்று பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. அந்த வகையில் இன்றைய கற்பித்தலுக்குக் கணினி எவ்வாறான முறைகளில் தேவையாக இருக்கிறது என்பது எண்ணுதற்குரியது. கணினியின் கண்டுபிடிப்புப் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக இருக்கிறது.
தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் ஆரம்பம்.
இன்றைய கல்விமுறையில் கற்பித்தலை எளிமையாக்குவதற்கும் கற்றலை இனிமையாக்குவதற்கும் கணினியின்வழி புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து அதனைச் செயல்படுத்த முனைகிறோம். அவ்வாறான முயற்சியினாலே இன்று பல புதிய கற்பித்தல் முறைகள் நிகழ்கின்றன. முற்காலத்தில் கற்பித்தல், கற்றல் இரண்டும் மனனம் செய்தல் என்னும் முறையில் இருந்தன. ஆனால் இன்று கணினியின் துணைகொண்டு கற்றலும் கற்பித்தலும் எளிமை அடைந்திருக்கிறது.
உலக இயக்கம் இன்று நம் கைகளில் இருக்கும் திறன்பேசிகளில் இருக்கிறது இதற்குக் காரணம் இணையம் (Internet) இந்த இணையம் அதிவேக பயன்பாடாக இருக்கிறது.
இணைய வசதி இல்லாத ஊர்களையோ இணையம் இல்லாத திறன்பேசிகளையோ காண்பது இன்று அரிதாகிவிட்டது. இணையத்தின் பயன்பாடு பல்வேறு நிலைகளில் வளர்ந்திருந்த போதிலும் சில இடங்களில் இதனால் பல்வேறு குற்றங்கள் நிகழ்கின்றன. அக்குற்றங்களுக்குக் காரணம் பயன்பாடு கருதி அதனைப் பயன்படுத்தாமையே. தேவையில்லாத இடங்களில் தேவையில்லாத நேரத்தில் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகுவதால் இணையம் என்பது தேவையில்லாத ஒன்று என்று சிலர் கருதுகின்றனர்.
பலநூறு பத்திரிக்கைகளின் தகவல்களைச் சிறு குறுந்தகவல்களாக இன்று இணையத்தின் மூலம் அறிந்துகொள்கிறோம். இணையம் (Internet) இன்று இல்லை என்றால் நேரலை (Live) என்று சொல்லக்கூடிய செய்திகளை நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியாது.
இணையம் மூலம் நிறைய வலைதளங்களுக்குச் சென்று புதிய தகவல்களை உடனுக்குடன் புதிய செய்திகளாகப் படிக்க வைக்கமுடியும். மாணவர்களுக்குத் தேடல் மனப்பான்மையை உருவாக்க முடியும். புத்தகங்களுக்கென்று நிறைய இணையதளங்கள் இருக்கின்றன. குறிப்பிடத் தகுந்த சில இணைய பக்கங்கள்.
https://www.tamilvu.org
https://ta.wikipedia.org
https://en.wikibooks.org/wiki/Subject:Internet
https://www.projectmadurai.org
https://chennailibrary.com/
https://www.keetru.com
போன்ற இணைய பக்கங்களுக்குச் சென்று நாம் கற்பிக்கும் கற்கும் நூல்களைப் பதிவிறக்கம் செய்து கற்கலாம்.
தமிழ்மொழியினைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி பிற மாநிலத்தினரும் பிற நாட்டினரும் எளிய முறைகளில் கற்பதற்கு இதுபோன்ற மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. இன்னும் எளிமையான மென்பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. எழுத்துகளைத் தட்டச்சு செய்யும்போது ஆங்கில மொழிக்கு இருப்பதுபோல் (Grammarly) தமிழிலும் மென்பொருள் வேண்டும். எழுத்துப்பிழை, சொற்பிழைகளைக்
கண்டறிய மென்தமிழ் (Menthamizh), நாவி (Naavi), சொற்பிழைதிருத்தி போன்ற மென்பொருள் இருக்கின்றன. இருப்பினும் அவை ஆங்கிலத்தில் இருப்பதுபோல் இன்னும் எளிமையாகக் கையாளும் வகையில் கொண்டுவர வேண்டும்.
கணினிவழிக் கற்பித்தலில் உள்ள சிக்கல்கள்
சிக்கல்களின்றி எந்த ஒரு தொழில்நுட்பமும் வெற்றியடைந்ததில்லை. கணினிவழிக் கற்பித்தலிலும் சிக்கல்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு,
- ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நேரடியான தொடர்பு இல்லாததால் ஆசிரியர், மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வு அமைவதில்லை.
- ஆசிரியர் வெறுமென பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. அதில்
மாணவர்களின் வாழ்வியலுக்கான ஒழுங்குமுறைகளையும் கற்றுக்கொடுக்கின்றனர்.
வகுப்பறைச் சூழல், சக மாணவர்களுடன் பழகும் முறை, சமூகத்துடன் இணைந்து
செயல்படுதல் ஆகியவை இம்முறைகளுக்குள் அடங்கிவிடும். - நாள் முழுவதும் கணினிவழியே கற்பித்தலினால் கணினித்திரையினால் ஏற்படும் வெளிச்சம் கண்களை எளிதில் பாதிப்படைய செய்கிறது.
- இணையத்தின் வழி அனைத்தும் கற்கமுடியும். இணையத்தின் வழி பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களினால் சிலர் வழிமாறிச் செல்கின்றனர்.
- சில சமூக வலைதளங்கள் மாற்றுவழிக்கு இட்டுச் செல்கின்றன.
- கணினி கற்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் பொழுதைக் கழிப்பதற்கு
இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டு பொருள்களை இழப்பதுடன் மன உளைச்சலுக்கும்
ஆளாக வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. - கற்பிக்கவும் கற்றுக்கொள்ளவும் கணினியைப் பயன்படுத்தினால் மிகச்சிறந்த
விஞ்ஞானியாக வரமுடியும். தேவையற்ற கவனம் மாற்றுப்பாதைக்கு வழி நடத்தும்.
அதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இவ்வாறான சிக்கல்களைக் கணினிவழி கற்பித்தலில் காணமுடிகிறது. இவை களையப்படவேண்டும்.
தமிழ்மொழிக் கற்பித்தலுக்கான மென்பொருள்கள்
கற்பித்தலுக்குப் பல்வேறு மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயக்க மென்பொருள்தான் (OS-Operating System) கணினி இயங்குவதற்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தரவுகளைக் கொண்ட ஒரு மின் சாதனமாக இருக்கிறது.
“முறையாகச் செய்யப்பட்ட கலைத்திட்டங்கள், பாடங்கள் ஆகியனவற்றை இணையத்திலேயே படிப்பதன் வழியாகத் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.”[2]
இதனால் இயங்கக்கூடிய தேடுபொறிகள் (Search Engine) கல்வி கற்பித்தலுக்கு உதவுகின்றன. அதில் கூகுள் நிறுவனத்தின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. (Google Translate, Drive, Meet, Gmail, Scholar, Sheets, Slides, Forms, Docs, Voice, Calendar, Chrome, Fonts, Google Input Tools, Maps, Photos, Assistant, Classroom, Cast, Gboard, Earth) போன்ற மென்பொருள்கள் கூகுள் நிறுவனத்தின் மென்பொருள்களாகும். இவையனைத்தும் தமிழ்மொழிக் கற்பித்தலுக்கான மென்பொருள்களாக இருக்கின்றன. இவற்றின்வழி எளிமையாகத் தமிழைக் கற்பிக்க முடியும்.
கற்பித்தலில் கணினியின் பயன்பாடு
கற்பித்தலுக்கு இன்றைய கணினி பெரும் பங்கு வகிக்கிறது. திறன்பேசி ஏற்படுத்தும் தமிழ் கற்றலானது. மேசைக் கணினியோ, மடிக்கணினியோ ஏற்படுத்தவில்லை என்று கூறுமளவிற்குத் தற்காலத்தில் திறன்பேசி பல்வேறு பயன்பாடுகளைத் தமிழ்வழியில் வழங்கிவருகிறது.
“கணினி, மடிக்கணினி, டாப்லெட்டுகள், ஸ்மார்ட்போன் என்று பலவிதக் கருவிகள் மூலமாக இணையம் அணுகப்பட்டாலும் சிறப்புக் கவனம் பெறுவது என்னவோ ஸ்மார்ட்போன்கள்தான். சமூக வலைதளங்களை அணுகுவதற்குப் பெரிதும் உதவுபவை இவைதான்.”[3]
கற்பித்தலுக்குக் கணினியே முக்கிய பங்காற்றுகிறது. திரைப்படக் கருவி (Projector) என்று வழங்கப்படுகின்ற இந்தக் கருவியின் மூலம் நேரடியாக (visual) மாணவர்களுக்குக் கற்பித்தல் எளிமையாக இருக்கிறது.
புத்தகச் சுமை குறைந்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கின்றனர். தமிழ் இணைய கல்விக் கழகம், பிற இணைய கல்வி நிறுவனங்கள் இணைய வழியில் தமிழைக் கற்றுக்கொடுக்கின்றன. தமிழை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிப்பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குக் கணினிவழிக் கற்றலே எளிமையாக இருக்கிறது. நேரடியாகத் தமிழாசிரியர்களைக் கொண்டு பிறநாடுகளில் தமிழைக் கற்பதைக்காட்டிலும் கணினியைக்கொண்டு இணையத்தின் மூலமே தமிழைக் கற்கின்றனர்.
பிறமொழிக்காரர்களுக்குக் கணினிமூலம் கற்பிப்பதனால் அவர்களுக்குத் தேவையான உதாரணங்களை எளிதாக வரைந்தும் தேடுபொறியின் உதவியினாலும் உடனடியாக அவர்களின் மொழிக்கே எளிமையாக மொழிமாற்றம் (Translate) செய்துக் காண்பிக்கமுடிகிறது. படங்களின் மூலமும் காட்சிகளின் மூலம் எளிதில் விளங்கிக் கொண்டு கற்கின்றனர்.
முடிவுரை
இன்றைய அறிவியல் உலகில் கணினியின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. கணினியின் பயன்பாடு இல்லாத இடங்களே இல்லை என்று கூறுமளவிற்குக் கணினியின் தேவையும் பயன்பாடும் பெருகிவிட்டது. தேவைக்கேற்ப பயன்படுத்தினால் எந்த ஒரு விளைவுகளும் ஏற்படாது. கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மட்டுமின்றி மற்ற துறை வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. இதன்மூலம் இன்றைய மனித செயல்பாடுகள் அனைத்தும் கணினிவசமே. அதனால் கணினியை நம் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும். அதன் தேவைக்கு நாம் செயல்படுவோமானால்
நாம் மனநிம்மதி இன்றி வாழவேண்டி வரும்.
கணினித் தமிழ் நூல்களும் கணினி பயன்பாடுகளும் கற்பதற்கும் கற்பித்தலுக்கும் பல்வேறு நிலைகளில் பயன்படுகிறது. அதற்கேற்ப பயன்படுத்த வேண்டும். அனைத்து அறிவியல் கருவிகளும் மனிதனின் வேலையை எளிமையாக்குவதற்கும் விரைவாகச் செய்துமுடிப்பதற்கும் கண்டுபிடிக்கப்பட்டன. இனி வருவனவும் அத்தகையதே. அதே நேரத்தில் மனிதனாக இருந்து செய்ய வேண்டிய கடமைகளை மனிதனே செய்ய வேண்டும். கற்றலும் கற்பித்தலும் மனிதனுக்கே.
துணை நூல் பட்டியல்
- மோகன வெங்கடாசலபதி எஸ். (2021). இணையச் சிறையின் பணயக் கைதிகள், தமிழ் திசை.
- சுந்தரம் இல. (2015). கணினித் தமிழ், விகடன் பிரசுரம்.
- https://www.valaitamil.com/offline-tamil-dictionary203962.html
- https://translate.google.co.in/
- https://manikandanvanathi.blogspot.com/2014/06/blog-post_16.html
- https://about.google/products
[1] சுந்தரம் இல. (2015). கணினித் தமிழ், விகடன் பிரசுரம், ப.227
[2] https://manikandanvanathi.blogspot.com/2014/06/blog-post_16.html
[3] மோகன வெங்கடாசலபதி எஸ். (2021) இணையச் சிறையின் பணயக் கைதிகள் தமிழ் திசை, ப.71