இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகநாடுகள் நாகரிக வாயிலைத் தொடுவதற்கு முன்னரே கவிதை, இலக்கிய வகையில் தன்னிகரின்றி தமிழர்கள் தலைநிமிர்ந்த வரலாறு நாடறிந்த உண்மையாகும். சங்ககாலத் தமிழர்களின் பண்பாடு, அரசியல், சமூக வரலாற்றிற்கு நேரடி குறிப்புகள் எதுவும் இல்லை எனினும், அக்காலத்திய இலக்கிய படைப்புகளும், கல்வெட்டுகளும், வெளிநாட்டவரின் குறிப்புக்களும் ஆதாரங்களாக உள்ளன. இலக்கியம் காட்டும் வாழ்க்கை முறையே அக்காலத்தில் இருந்தது என முழுமையாக நம்புகிறவர்களும் உண்டு. இலக்கியப் படைப்புகள் இலட்சிய வாழ்வின் எதிர்பார்ப்புகளாக இருந்தன எனக் கருதுவாரும் உண்டு. எப்படியாயினும் சங்க காலத் தமிழர் வாழ்வு சீரும் சிறப்பும் கொண்டு சிறப்புடன் இருந்தது என்பதில் ஐயமில்லை. பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய புதுவையின் பண்பாட்டு வரலாறும், வாழ்வும் தமிழகத்தோடு இணைந்திருந்தன. அரிக்கமேடு அகழ்வாய்வுகளும், புதுவை பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளும் புதுவையின் இலக்கியச் சிறப்பினை, வாழ்க்கை வளத்தை, அயல்நாட்டு தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரியில் மதம் பரப்புவதற்காக வந்த பாதிரிமார்கள் இரண்டு வகைகளாகப் பிரிந்து மதம் பரப்புவதில் அழுத்தத்தைக் காட்டி வந்தனர். அவர்களிள் ஒருவகை கப்பூச்சின் பாதிரிமார்கள் என்றும், மற்றொரு வகை சேசுசபை பாதிரிமார்கள் என்றும் இரு பெரும் பிரிவுகளாக இருந்து தங்களின் கிறிஸ்துவ மதத்தை பூர்வகுடிகளின் மத்தியில் பரப்பி வந்தனர். மற்றும் பலதரப்பட்ட சிக்கல்களையும், தடைகளையும் பூர்வகுடிகளின் இந்து மதத்திற்கும், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் கொடுத்து வந்தனர். மேலும் இந்துக்களுக்குள் வலங்கை, இடங்கை என்னும் இரு பெரும் பிரிவுகளாக மக்கள் பிளவுபட்டு, இருவேறு பெரும் துருவங்களாக சமூகத்தில் எப்பொழுதும் பலதரப்பட்ட பூசல்களில் ஈடுபட்டு வந்தனர். மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பலதரப்பட்ட சிக்கல்களும், அழுத்தங்களும் நடைபெற்றுள்ளன. இவையனைத்தையும் மானிடவியல் பார்வையில் ஒரு இனவரலாற்று அடிப்படையில் இதுவரையில் யாரும் ஆய்வுகள் செய்யவில்லை என்பதால், மானிடவியல் ஆய்வாளர் என்ற முறையில் பிரன்ச்சு புதுச்சேரியின் பண்பாட்டு அசைவுகளை இந்த ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ந்து வழங்குகின்றேன். ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரும், புதுவை விடுதலைப் பெற்ற காலத்திற்கு முன்னரும் உள்ள இடைப்பட்ட காலத்தில், புதுவையின் பூர்வீகக்குடிகளான தமிழர்களின் பண்பாட்டு அசைவுகளையும், சமூக வளர்ச்சியின் வரலாற்றையும், சமூக பண்பாட்டு மாறுதல்களையும், முரண்பாடுகளையும் தெளிவாக வரலாற்று ஆவணங்களின் அடிப்படை உதவியுடன் இந்த ஆய்வுக்கட்டுரையில் காணலாம்.