திருக்குறளில் சில மரங்களின் பெயர்கள் நேரடியாகவும், சில மரங்கள் பொதுப்படையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள மரங்களைப் பற்றி இங்கு காண்போம்.
நேரடியாகக் குறிப்பிடப்படும் மரங்கள்:
திருக்குறளில் இரண்டு மரங்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பனை மரம் மற்றும் மூங்கில் மரம் ஆகும்.
பனை மரம்:
பனை மரம் திருக்குறளில் மூன்று குறட்பாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்”
- “தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.”
- “தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்.”
இக்குறட்பாக்களில், சிறிய உதவி செய்தாலும் அதனைப் பனை மரத்தைப் போல பெரிதாக எண்ணி நன்மை செய்பவர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும், சிறிய தவறு நேர்ந்தாலும் அதனைப் பனை மரத்தைப் போல பெரிதாக எண்ணிப் பழிக்கு அஞ்சுபவர்களைப் பற்றியும், சிறிய ஊடலும் பனை மரத்தைப் போல காமத்தை வளர்க்கும் என்பதையும் கூறுகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் பனை மரம் பற்றிய உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூங்கில் மரம்:
மூங்கில் மரம் திருக்குறளில் மூன்று குறட்பாக்களில் காம்பு, பணை, வேய் ஆகிய சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
- “கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது.”
- “பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்.”
- “முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.”
இக்குறட்பாக்கள் காமத்துப்பால் பகுதியில் உள்ளன. இதில் மூங்கில் மரமானது பெண்களின் தோள்களுக்கு உதாரணமாகக் கூறப்படுகிறது. மென்மையான மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்களின் அழகு இதில் வர்ணிக்கப்படுகிறது.
பனை மரத்தைப் பற்றிய உதாரணங்களில் வெவ்வேறு நிகழ்வுகளுக்கு ஒரே மாதிரியான உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மூங்கில் மரத்தைப் பற்றிய உதாரணங்களில், மூங்கில் மரம் பெண்களின் தோள்களுக்கு மட்டுமே உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.
பொதுப்படையாகக் குறிப்பிடப்படும் மரங்கள்:
இவை தவிர, திருக்குறளில் பொதுப்படையான மரங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- “மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.”
- “அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.”
- “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.”
- “இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து”
- “நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.”
இக்குறட்பாக்களில், பயன் தரும் மரம், முள் மரம், காய்ந்த மரம் போன்ற மரங்கள் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மரங்களைத் தவிர வேறு மரங்கள் திருக்குறளில் காணப்பட்டால், அவை பின்னர் சேர்க்கப்படும்.