விழா என்ற தலைப்பைப் பார்த்ததும், என் மனதில் நீண்ட காலமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஒரு விழாவைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அது சோழர் காலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழாவே ஆகும். குறிப்பாக, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தபோது, இந்த விழாவைப் பற்றி நான் பலமுறை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழ நாட்டில் ஆடிப்பெருக்கு விழா மிக முக்கியமான விழாவாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் திருவிழாவிற்கு இணையான முக்கியத்துவம் இதற்கு இருந்தது. ஆடி மாதம் பெருகி வரும் நதிகளின் நீரை வரவேற்கும் விதமாக இந்த விழா கொண்டாடப்பட்டது.
ஆடிப்பெருக்கு திருவிழாவின்போது, சோழ நாட்டின் நதிகள் அனைத்தும் இரு கரைகளையும் தொட்டு ஓடும். அந்த நதி நீர் சென்று சேரும் ஏரிகள், குளங்கள் எல்லாம் நிரம்பி வழியும். இந்த அழகிய காட்சியைப் பார்ப்பதற்காகவே மக்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
திருவிழாவிற்கே உரிய அங்காடிகள் பல இடங்களில் களைகட்டும். பலவிதமான கடைகள் வரிசையாக இருக்கும். அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். பலாச்சுளை, வாழைப்பழம், கரும்புத் துண்டுகள், பலவிதமான தின்பண்டங்கள் என பலவகையான பொருட்களை வாங்கிச் சிறுவர் கூட்டம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
ஒருபுறம் கடைகள் இருக்க, மறுபுறம் மல்லிகை, முல்லை, தாமரை, அல்லி, செண்பகம், தாழம்பூ போன்ற பலவிதமான மலர்கள் குவிந்து கிடக்கும். வண்ணமயமான மலர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும்.
மேலும், திருவிழாவில் ஜோதிடர்கள், ரேகை சாஸ்திர வல்லுநர்கள், குறி சொல்பவர்கள், விஷக்கடிக்கு மந்திரம் போடுபவர்கள் எனப் பலரும் இருப்பார்கள். அவர்களிடம் குறி கேட்பதற்காக மக்களும் திரண்டு இருப்பார்கள்.
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கேற்ப, விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவுப் பணிகளையும், விதை தெளிக்கும் பணிகளையும் மும்முரமாகச் செய்வார்கள். ஆடி மாதத்தில் வெயில் அதிகமாக இருந்தாலும், களைப்பு தெரியாமல் இருப்பதற்காக குடியானவர்களும், பெண்களும் சேர்ந்து பாடிக் கொண்டே வேலை செய்வார்கள்.
கிராமங்களில் இருந்து மக்கள் வண்டிகளில் குடும்பம் குடும்பமாகத் திருவிழாவிற்கு வருவார்கள். கூட்டாஞ்சோறு, சித்ரான்னம் போன்ற உணவுகளைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில் கமுகு மட்டையில் வைத்து அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.
காதலிக்கும் ஜோடிகளும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். காளையர்கள் புதுப்புது உடைகள் அணிந்து ஊர் முழுவதும் உலா வருவார்கள். கன்னியர்கள் விதவிதமான ஆடைகளையும், அணிகலன்களையும் அணிந்து காளையர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கன்னியர்களின் கூந்தலை விதவிதமான நறுமணம் கொண்ட மலர்கள் அலங்கரிக்கும். வயது முதிர்ந்தவர்கள் கூட இந்தப் பண்டிகையை மகிழ்ச்சியாக வரவேற்பதற்காகப் புத்தாடை அணிந்து வருவார்கள்.
இந்த ஆடிப்பெருக்கு திருவிழா சோழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் ஒரு விழாவாக இருந்தது. இது பண்டைக்காலத் தமிழர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கொண்டாட்டங்களையும் எடுத்துரைக்கிறது.