சுருக்கம்
சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழரின் வாழ்வியல், பண்பாடு, நம்பிக்கைகள் மற்றும் தகவல் தொடர்பு முறைகளை அறிந்துகொள்வதற்கான சிறந்த தகவல் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மனிதர்களைத் தவிரப் பல்வேறு ஊடகங்களையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதைச் சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் முரசு, பறை, தண்ணுமை, முழவு போன்ற இசைக்கருவிகள் போர் தொடங்குதல், வெற்றி அறிவித்தல், திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளை உணர்த்தும் தகவல் தொடர்புச் சாதனங்களாக விளங்கியுள்ளன. மேலும், கொடியேற்றுதல், மடலேறுதல், விரிச்சி கேட்டல் போன்ற செயல்முறைகளும் குறிப்பிட்ட செய்திகளைப் பிறருக்கு உணர்த்தும் ஊடகங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. காலநிலை மாற்றங்கள், பூக்களின் மலர்ச்சி, பறவைகளின் செயல்பாடுகள், பல்லியின் ஒலி, உன்ன மரத்தின் இயல்பு போன்ற இயற்கைக் கூறுகளும் எதிர்கால நிகழ்வுகளை உணர்த்தும் குறியீடுகளாகவும் நம்பிக்கை சார்ந்த தகவல் ஊடகங்களாகவும் கருதப்பட்டுள்ளன. இக்கட்டுரை சங்க இலக்கியங்களில் இடம்பெறும் மேற்கண்ட தகவல் பரிமாற்ற முறைகளை இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்ந்து, பண்டைத் தமிழரின் சமூக வாழ்விலும் பண்பாட்டிலும் அவை பெற்றிருந்த இடத்தையும் அவற்றின் தகவல் தொடர்பியல் தன்மைகளையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம், பண்டைத் தமிழரின் தகவல் பரிமாற்றம் நேரடி மொழிவழித் தொடர்பைத் தாண்டி, இசை, குறியீடு, சடங்கு, இயற்கை ஆகியவற்றின் வழியாகவும் நிகழ்ந்தமை புலப்படுகிறது.
மேற்கோள்கள்
2 references- பாலசுப்பிரமணியன்.கு.வெ.,(உ.ஆ), 2004, சங்க இலக்கியம் (எட்டுத்தொகை & பத்துப்பாட்டு), மதுரை, நேசனல் செஞ்சுரி புக் ஹவுஸ்.
- புலியூர்க் கேசிகன்.,(உ.ஆ), 2012, தொல்காப்பியம், சென்னை, கெளரா பதிப்பகம்.