சித்தர் என்னும் சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதியில் கொடுக்கப்பட்ட பொருள் சித்தி பெற்றவர்கள், அருள் பெற்றவர்கள் என்பதாகும். சித்தர் என்னும் சொல்லோடு தொடர்புடைய சித்து என்னும் சொல்லுக்கு மாயவித்தை, இரசவாதிகள் எனத் தமிழ்ப்பேரகராதி பொருள் கொடுத்துள்ளது. இவற்றின் அடிப்படையில் சித்தர் என்னும் சொல் சித்திகள் கைவரப்பெற்றவர்கள் என்றும், முடிவான கொள்கையையும், சமூகப் பற்றும் உடையோர்கள் என்றும் வரையறுக்கலாம். தொல்காப்பியத்தில் வரும் அறிவன், கணியன் ஆகிய பெயர்கள் சித்தர்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. நாட்டுப்புற வழக்காறுகளான பழமொழியிலும் தமிழக ஊர்ப்பெயர்களிலும் (சித்தர்க்காடு) சித்தர் என்னும் சொல்வழக்குப் பரவலாகக் காணப்படுகிறது. சித்தர்கள் யோகப் பயிற்சியில் நாட்டமுடையவர்கள். மக்கள் சமய, சமூக வாழ்வில் மரபாய் ஊன்றியிருந்த கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களைத் தம் பாடல்களில் சாடியிருக்கிறார்கள். சித்தர்களின் எண்ணிக்கையை வரையறுப்பது மிகவும் சிக்கலானது. உலக வாழ்க்கையினின்று மாறுபட்டுச் சமுதாயத்தில் உள்ள அவலங்களை நாட்டார் வழக்கிலே பாடியுள்ளனர். நாட்டுப்புறப் பாடல்கள் வழியாக மூட நம்பிக்கையை சாடிய சித்தர்களின் பன்முகப் பார்வை, மிகவும் பரந்துப்பட்டது. உலக வாழ்க்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மொழி மற்றும் அதன் புரிதல்களைக் கொண்டு, சித்தர்களையும் அவர்தம் கருத்துக்களையும் புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்களுக்காக பாடியவர்கள். சித்தர்கள் பாடிய பாடல்களில் காணலாகும் நாட்டுப்புறக் கூறுகளைக் கண்டறிதல் இவ்ஆய்வின் நோக்கமாக அமைகிறது..

Vol. 3 No. 01 (2025)
Special Issue August 2025
- Published
நூல் வெளியீட்டு உரை
தமிழ் மொழியின் ஆழமான வேர்களையும், இந்தியச் சிந்தனை மரபின் மகத்தான பங்களிப்பையும் ஒருசேர ஆராயும் உன்னதப் படைப்பாக,
'இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்'
என்னும் இந்நூலை வெளியிடுவதில் தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் பெருமிதம் கொள்கிறது.
பழந்தமிழ்ச் சமூகத்தின் அறிவுசார் செழுமையையும், அதன் தொலைநோக்குச் சிந்தனைகளையும் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். அரசியல், அறிவியல், அறவியல், கலைகள், தொழில்நுட்பம், மேலாண்மை, இயற்கை, எதிர்காலவியல் போன்ற நவீன ஆய்வுத் தளங்களில் வேரூன்றிய இந்தியச் சிந்தனை மரபுகளை, தமிழ் இலக்கியத்தின் காலங்கடந்த படைப்புகளான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற செவ்வியல் நூல்களில் எவ்வாறு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை, வரலாற்றுப் பின்னணிகளுடன் இந்நூல் வெளிக்கொணர்கிறது.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தேனி தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் மிகச் சிறந்த படைப்புகள் ஒரு நூல் வடிவில் உலகத் தமிழ் அறிஞர்களின் கைகளில் தவழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆய்விதழ்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் (ISSN: 3049-0723), இத்தகைய ஆழமான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பைச் சிறப்பிதழாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. உயரிய ஆய்வுத் தரத்துடன், புதிய கோணங்களில் தமிழ் இலக்கியத்தை அணுகும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆய்வுலகிற்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் இந்நூல், தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஒரு அரிய பொக்கிஷமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
இந்நூல் வெளிவரக் காரணமாக இருந்த அனைத்து நல்மனங்களுக்கும், குறிப்பாக புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, கல்லூரி நிர்வாகம், தமிழ்த்துறை ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
